Friday, September 3, 2010

சதுர் + அங்கம்

ஒரு பக்கச் சேனை பத்தோடு  ஆறு 
மறு பக்கப் படையோ அது போல ஒன்று 
மோதும் படை மொத்தம் முப்பத்தி ரெண்டு 
பாதம் படும் இடமோ அறுபத்து நான்கு
புறமுதுகு காட்டாத அட்டமா சேனை 
கருமமுடன் அரசனொடு அணிவகுத்து நிற்க 
பண்பான வியூகங்கள் பார்த்தரசு செல்ல 
வெற்றி  அல்ல வீரனுக்கு மரணமும் ஒன்றே 
அரசனோ அதிகம் நடமாடக் கூடா
அதனாலே ஆடுவார் ஒரு பாத நடனம்
அரசிதான் ஆங்கே ஆட்டத்தின் ராணி
மந்திரிகள் புத்தி மதிநுட்பம் காட்டும்
குதிரையின் ஓட்டம் புதிரான தோற்றம்
யானைகளும் மெதுவாக ஒற்றை வழி போகும்
வீரர் படை எதிரிதன் கோட்டைக்குள் சென்றால்
பதவியுயர்வாகி  ஒரு பட்டமே பெறுவார்
ஓடமுடியாத நிலை ஒன்றங்கு வந்தால்
ஆட்டமது முடியும் அதுதானே முடிவும்
போருக்கு விதியுண்டு போட்டிக்கும் அதுவே
விளையாட்டு என்றாலும் விதி மாறக்கூடா
விதி   மாறிப்போனாலே வழி மாறும் பயணம்
விளையாட்டுக் கூட வினையாகக் கூடும்
வென்றவர் கைகளில் வெற்றிப் பதக்கமா
தோற்றவர் கண்களில் எண்ணக் கலக்கமா
அந்தக்குழப்பங்கள் ஒன்றுமே வேண்டாம்
வெற்றியும் தோல்வியும் ஒன்றெனப் பார்த்திடும்
மாந்தர்கள் ஆகுவோம் வேந்தர்கள் ஆகுவோம்
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் இனம்
எங்கும் வலம் வரும் என்றும் வளம் பெறும்

No comments:

Post a Comment