Sunday, October 10, 2010

நிகரில்லா அழகு

அம்மா இன்று பள்ளியிலே
ஆண்டு விழாவொன் றிருக்கிறது
சும்மா சாட்டுச் சொல்லாமல்
சுறுக்காய் வாநாம் போய்வருவோம்

அந்த விழாவில் தாய்மார்கள்
அனைவரும் வருவார் பள்ளிக்கு
இந்த முறையும் வாராமல்
என்னைத் தனியே அனுப்பாதே

இல்லை என்னைக் கேளாதே
இருக்கு எனக்கு வேலைபல
தொல்லை தராமல் நீசென்று
சகமாய்த் திரும்பி வாமகளே

பள்ளிக் குhடஞ் சென்றமகள்
பாதி விழாவில் திரம்பிவிட்டாள்
துள்ளிக் குதிக்க மறந்தவள்போல்
துயரம் பொங்க வந்துநின்றாள்

அன்னை உள்ளம் பதறிற்று
அணைத்துத் தலையை வருடிற்று
உன்னைத் துயரஞ் செய்தவர்யார்
உடனே சொல்லு என்றாளே


விழாவில் என்ன நடந்ததுசொல்
வீதியில் எதுவும் நடந்ததுவோ?
அழாதே கண்ணே என்றுசொல்லி
அணைத்து உச்சி முகர்ந்தாளே

என்னுடன் படிக்கும் பிள்ளைகளில்
எல்லோர் தாயும் வந்திருந்தார்
என்ன அழகு அவர்களெல்லாம்
ஏன்நீ இப்படி இருக்கின்றாய்

மல்லிகா வந்தாள் தாயோடு
மல்லிகை போலே முகமம்மா
அல்லியின் தாயின் அழகைநான்
அம்மா சொல்லி முடியாதே

சந்திராவின் தாய் முகம்பார்த்தேன்
சந்திரன் போலே அழகம்மா
இந்திராவின் தாய் அம்மம்மா
இப்படி அழகைப் பார்த்ததில்லை

ஓவ்வொரு தாயின் முகமுந்தான்
ஓவ்வொரு விதத்தில் ஜொலிக்கிறது
அவ்வுரு வெல்லாம் உனக்கில்லை
அழகே இல்லை உன்முகத்தில்

 கறுப்புத் தழும்பாய் உன்முகத்தில்
கரடு முரடாய் இருப்பதென்ன
வெறுப்பாய் இருக்கு பார்ப்பதற்கு
வேதனை தருது  சொல்லுவதற்கு

மகளின் வார்த்தை கேட்டஅன்னை
மனம் கலங்கிப் போயிற்று
முகமே நனைய அழுதுவிட்டு
முத்தம் தொடுத்து கதைசொன்னாள்

ஆறு மாதக் குழந்தயாய்நீ
அழகாய் தொட்டிலில் உறங்கையிலே
வேறு வீட்டில் தண்ணியள்ள
விரைந்தேன் ஒருநாள்;, அந்நாளில்

அயலில் உள்ள வீட்டினிலே
அடுப்படி தன்னில் தீபிடித்துப்
புயலாய்ப் பரந்தெம் வீட்டிநுள்ளும்
புகுந்து அத்தீ எரித்ததம்மா
துண்ணீர் அள்ளி வரும்போது
துகதக என்றே தீப்பிடித்து
விண்ணை  முட்டும் புகைகண்டேன்
வீட்டுள் ஓட நான்முயன்றேன்
எரியும் நெருப்பில் நான்செல்ல
என்னை யாரும் விடுவாரோ
கருகிப் போக உன்னைவிட்டுக்;
கண்ணே நானும் இருப்பேனோ
கட்டிப் பிடித்த கைகளைநான்
கழற்றி வீட்டுள் பாய்ந்து விட்டேன்
தொட்டில் தன்னில்  நீகிடந்தாய்
தூக்கி கொண்டே ஓடிவந்தேன்
உன்னை அணைத்த பகுதியன்றி
உடலில் மற்றைப் பகுதியெல்லாம்
என்னை நெருப்பு எதித்ததடி
என்று சொல்லி அழுதாளே

தாயின் கதையைக் கேட்டவுடன்
ததும்பிய கண்ணிர் வழிந்தோட
வாயால் எதுவும் சொல்வதற்கு
வார்த்தை யின்றித் துடிதுடித்து

அன்னையை இறுகக் கட்டியவள்
அன்பு முகத்தில் முத்தமிட்டாள்
உன்னைப் போல அழகிந்த
உலகில் இல்லை இல்லையென்று

தாயைக் கட்டி முத்தமிட்டாள்
தாமரைக் கையால் வழிந்தோடும்
நீரைத் துடைத்து முகம்பாத்தாள்
நிகரில்லா அழகு உனக்கென்றாள்